திருவரங்கம்: காசு கொடுக்காமல் இலவசமாக நிலக்கடலை கேட்டு தகராறு செய்ததாக திருவரங்க சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
திருவரங்கக் கோயிலின் ராஜகோபுரத்தின் அருகே ராஜன் பிரேம்குமார் என்பவர் பட்டாணிக் கடை வைத்திருக்கிறார். இவர் வணிக சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும் பதவி வகிக்கிறார். இந்நிலையில் திருவரங்க காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை உதவி ஆய்வாளர் ராதா (58), அந்தக் கடையில் இருந்த ராஜனிடம் வறுத்த நிலக்கடலை கொடு என்று கேட்டுள்ளார்.
அதற்கு ராஜன் மகன் ஷாம் ஆஸ்பாஷ் என்பவர், “எவ்வளவு ரூபாய்க்கு வேண்டும்,” என்று கேட்டுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர், “நான் திருவரங்க காவல்நிலையத்தில் தான் இருக்கிறேன். வேறு எங்கும் இருந்தும் வரவில்லை. கொஞ்சம் கொடுப்பா” என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால், கடைக்காரரோ அவருக்கு நிலக்கடலை கொடுக்க மறுத்து விட்டார்.
அந்தச் சம்பவத்தை அங்கு வேடிக்கை பார்த்தவர்கள் காணொளி எடுத்து அதை சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளனர்.
இந்நிலையில், கடலைக்கடைக்காரர், காவல்துறை அதிகாரி கடையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளிக் காட்சியுடன் திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினியிடம் புகார் செய்தார். இதையடுத்து உதவி ஆய்வாளர் ராதாவை ஆணையர் பணியிடை நீக்கம் செய்தார்.
உதவி ஆய்வாளர் பட்டாணிக் கடையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.