சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக, சென்னையில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தப் படுகொலை தொடர்பாக எட்டுப் பேர் சரணடைந்துள்ளனர். இந்நிலையில், முன்விரோதம் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில வடமாநிலங்களில் வலுவாக உள்ளது பகுஜன் சமாஜ் கட்சி. இக்கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்தார் ஆம்ஸ்ட்ராங். 52 வயதான இவர் வழக்கறிஞர் ஆவார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு, தான் கட்டிவரும் புதிய வீட்டைப் பார்வையிடச் சென்றார் ஆம்ஸ்ட்ராங்.
நண்பர்கள் இருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் திடீரென ஆம்ஸ்ட்ராங்கைச் சுற்றி வளைத்து தாக்கினர்.
இத்தாக்குதலைச் சற்றும் எதிர்பாராத ஆம்ஸ்ட்ராங், படுகாயம் அடைந்து அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை நண்பர்கள் இருவரும் காப்பாற்ற முயன்றபோது அவர்களுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
கொலையாளிகள் தப்பி ஓடியதை அடுத்து, ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவர் முன்பே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருவதாக காவல்துறை அறிவித்திருந்தது. எனினும் இந்தப் படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேர் காவல்துறையிடம் சரணடைந்தனர்.
ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்துறை ஏற்கெனவே எச்சரித்திருந்ததாகவும் இதுகுறித்து அவருக்கு ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்ததாகவும் ஒரு தகவல் கூறுகிறது.
மூன்று முறை எச்சரித்து பிறகும் ஆம்ஸ்ட்ராங் இரவு நேரத்தில் வெளியே சென்றதுதான் கொலையாளிகளுக்கு சாதகமாகிவிட்டதாக காவல்துறை கூறியுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் இறுதிச்சடங்களில் பங்கேற்க பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் சென்னை வருவதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக பலனடைந்து இருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, எட்டுப் பேர் சரணடைந்துவிட்டாலும், இப்படுகொலை தொடர்பாக ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஏற்கெனவே சில குண்டர் கும்பல்களுடன் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் மீதான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.