சேலத்தில் தொடங்கப்பட்ட 80 நிறுவனங்கள்; 2,000 பேருக்கு வேலை வாய்ப்பு

1 mins read
801bfd55-47d4-45f6-a4d7-a0ce14f8a1ae
சேலம் ஆட்சியர். - படம்: ஊடகம்

சேலம்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் சேலம் மாவட்டத்திற்கு மட்டும், ரூ.1,638 கோடி மதிப்புள்ள முதலீடுகள் கிடைத்துள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

மொத்தம் 124 நிறுவனங்களுடன் இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் முனைவோருக்கு ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது.

அப்போது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் மாநில அளவில் ரூ.63,573 கோடி மதிப்புள்ள முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சேலம் மாவட்டத்தில் முதலீடு செய்ய உள்ள 124 நிறுவனங்களில், இப்போது வரை 80 நிறுவனங்கள் தொடங்கப்பட்டு 2,000க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் திறன் வாய்ந்த படித்த இளைஞர்கள் அதிகமாக உள்ள காரணத்தாலும் தொழில் தொடங்குவதற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதாலும் எவ்வித தயக்கமும் இன்றி முதலீட்டாளர்கள் தொழில் தொடங்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி கூறினார்.

குறிப்புச் சொற்கள்