15 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளேன்: ‘கல்யாண ராணி’ கைது

2 mins read
b126ee5d-23f1-4126-8463-8c6427edb782
‘கல்யாண ராணி’ சத்யா. - படம்: ஊடகம்

ரோடு: 15 பேரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட ‘கல்யாண ராணி’ கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோட்டைச் சேர்ந்த சத்யா பல ஆண்களிடம் நெருங்கிப்பழகி திருமணம் செய்து ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். 32 வயதான அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோட்டைச் சேர்ந்த சத்யாவுக்கு, தமிழ்ச் செல்வி என்ற 34 வயது தரகர் உதவியுள்ளார். தமிழ்ச் செல்வி மூலம் திருமணத்துக்காகக் காத்திருக்கும் பலரைப்பற்றிய தகவல்களைத் திரட்டியுள்ளார் சத்யா.

பின்னர் அவர்களைத் தேடிச்சென்று நட்பு பாராட்டி, தனிப்பட்ட விவரங்களைத் திரட்டுவார். அதன்பிறகு தன் வலையில் விழுந்த ஆண்களைத் திருமணம் செய்து தலைமறைவாகிவிடுவார்.

இந்நிலையில் தாராபுரத்தைச் சேர்ந்த 29 வயது இளையருக்கு சத்யா மீது காதல் ஏற்பட்டது.

விவசாயியான இவருக்கும் சத்யாவுக்கும் கடந்த மாதம் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ஆனால் அதன் பிறகே சத்யா மீது அந்த இளையருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

தனது புது மனைவி சத்யா பல ஆண்களிடம் பேசி வருவதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சத்யாவிடம் அவர் இடைவிடாமல் பல கேள்விகளை எழுப்பினார்.

ஒரு கட்டத்தில், இந்த விசாரிப்பைப் பொறுத்துக்கொள்ள இயலாத சத்யா, தாம் இதுவரை 15 பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாக கோபத்துடன் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறுதான் தாராபுரத்தைச் சேர்ந்த இளையரையும் ஏமாற்றியது குறித்து அவர் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், மறுநாளே அவர் மாயமாக, அதிர்ச்சி அடைந்த சத்யாவின் புதிய கணவர் காவல்துறையை அணுகி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்