தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உண்மையான குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை: மாயாவதி

2 mins read
9254812c-4922-4569-be1c-e17f4ec784f6
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி சென்னைக்கு நேரில் சென்று, அக்கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். - படம்: எக்ஸ் / மாயாவதி
multi-img1 of 2

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அக்கட்சியின் தேசியத் தலைவரான மாயாவதி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்மாதம் 5ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் ஒரு கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தது.

இதன் தொடர்பில் முதல் கட்டமாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி உட்பட எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மேலும் மூவரைக் கைது செய்து அவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

“ஆனால், உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை,” என்று மாயாவதி கூறியுள்ளார்.

நீதியை நிலைநாட்ட இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாயாவதி கேட்டுக்கொண்டார்.

முன்னதாக முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதல்வருமான மாயாவதி பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 52 வயது ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது ஆம்ஸ்ட்ராங்கின் மரணம் குறித்து வேதனையை வெளிப்படுத்திய அவர், மாலையில் ஒரு கும்பலால் அவர் கொல்லப்பட்ட விதம், மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சரியாக இல்லை என்பதையே காட்டுகிறது என்றார்.

அது மட்டுமல்லாமல் மாநிலத்தில் தலித்துகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இது கோழைத்தனமான செயல் எனச் சாடியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தலைவர்களும் கண்டித்துள்ளனர்.

இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யவும் கல்லறை எழுப்பவும் அனுமதியளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தேமுதிக தலைவர் விஜய்காந்தின் உடல் அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய சென்னை மாநகராட்சி அனுமதியளித்ததை ஜூலை 7ஆம் தேதி சிறப்பு நீதிமன்ற விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், குறுகிய சாலையுடன் குடியிருப்புப் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் உள்ளதால அங்கு உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி ஏ. பொற்கொடி தாக்கல் செய்த மனுவுக்கு நீதிபதி வி. பவானி தீர்ப்பளித்தார்.

சென்னை மாநகராட்சி பரிந்துரை செய்த மூன்று இடங்களில் ஏதேனும் ஒன்றில் தற்போது உடலை அடக்கம் செய்யலாம் என்று நீதிபதி மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்