சென்னை: அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமியின் தலைமை தொடர்ந்தால் அதிமுக பெரும் வீழ்ச்சியைத்தான் சந்திக்கும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அ.தி.மு.க தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதையறிந்த தொண்டர்களும் மக்களும் அவரை நிராகரித்து விட்டார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை.
“2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது தென் மாவட்டங்களின் ஒன்பது மக்களவைத் தொகுதிகளில் அதிமுக பெற்ற வாக்குகள் 30 இலட்சத்திற்கும் அதிகம். ஆனால், நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் அது 15 இலட்சமாக குறைந்துவிட்டது. 50 விழுக்காடு வாக்குகளை அதிமுக இழந்துவிட்டது. இந்த வாக்குகளும் ‘இரட்டை இலை’ சின்னத்திற்காக போடப்பட்ட வாக்குகள்.
“ஒற்றைத் தலைமை வந்த பிறகு, 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அதிமுக 34 இடங்களில் போட்டியிட்டு ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 34 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், வெறும் 20.46 விழுக்காடு வாக்குகளைத் தான் பெறமுடிந்தது.
“கூட்டணிக் கட்சியான தேமுதிக.வின் வாக்கு விழுக்காடான 2.59 விழுக்காட்டினை சேர்த்தால், மொத்த வாக்கு 23.05 விழுக்காடு. எட்டு விழுக்காடு வாக்குகளை அதிமுக இழந்திருக்கிறது. ஏழு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன் பணத்தை இழந்துள்ளனர்.
அதிமுகவை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தொடர் தோல்வியை சந்தித்து வரும் ‘படுதோல்வி’ எடப்பாடி பழனிசாமி தலைமையை தொண்டர்கள் நிராகரித்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.
இந்தத் தலைமை தொடர்ந்தால், அதிமுக மாபெரும் வீழ்ச்சியைத்தான் சந்திக்கும்,” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எனவே, இதனை புரிந்துகொண்டு, தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.வை வலுப்படுத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி பதவியில் இருந்து விலகினால்தான் கட்சி வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்று பொதுமக்களும் தொண்டர்களும் விரும்புகிறார்கள். தாமாக பதவி விலக எடப்பாடி பழனிச்சாமி மறுக்கும்பட்சத்தில், தொண்டர்களும் பொதுமக்களும் இணைந்து அதற்கான சூழலை நிச்சயம் உருவாக்குவார்கள்,” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

