சென்னை: தமிழக பாஜகவில் 261 குற்றவாளிகள் இருப்பதாகவும், அவர்கள் மீது 1977 வழக்குகள் உள்ளதாகவும் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டுக்குச் சென்று பாஜக தலைவர் அண்ணாமலை திங்கட்கிழமை அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றப் பின்னணி உடையவர் என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, “துக்க வீட்டில் என்ன பேச வேண்டும் என்பது அண்ணாமலைக்குத் தெரியவில்லை. ஆருத்ரா குறித்து நான் எழுப்பிய கேள்வியை அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டவுடன் கோபத்துடன் என்னை ரெளடி பட்டியலில் உள்ளவர் என்று தெரிவித்துள்ளார். தலித் மீது அவதூறு தெரிவித்தால் சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது அண்ணாமலைக்குத் தெரியாதா?
“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போனதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். குற்றப் பட்டியலில் உள்ள 261 பேரை பாஜக தலைவர்களாக நியமித்துள்ளீர்கள். அவர்கள் மீது 1977 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
“கர்நாடகத்தில் அண்ணாமலை என்ன வேலை செய்து கொண்டிருந்தார். எழுத்தாளர்கள் உள்பட பல கொலைகள் நடந்தது குறித்து அடுத்ததாக கர்நாடக அரசிடம் அறிக்கை கேட்கவுள்ளேன். அண்ணாமலை எதற்காக திடீரென பதவியிலிருந்து விலகினார் என்பதை ஆராய வேண்டும்.
“அண்ணாமலையை தொடர்ந்து மன்னித்து வருகிறோம். ஆனால், மக்கள் மன்னிக்க மாட்டார்கள். துக்க வீட்டில் போனால் என்ன பேசவேண்டும், திருமண வீட்டில் என்ன பேச வேண்டும் எனத் தெரியவில்லை. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி பற்றி பேசும் அண்ணாமலை, இந்திரா காந்தியை துர்கா தேவி என்று வாஜ்பாய் புகழ்ந்ததை ஏன் பேசவில்லை. மருத்துவத்துக்காக தன்னை அமெரிக்கா அனுப்பியதற்கு ராஜீவ் காந்திக்கு, வாஜ்பாய் நன்றி தெரிவித்த வரலாற்றைப் பற்றி ஏன் பேசவில்லை?
“என்னை குற்றப் பின்னணி கொண்டவர் என்று பேசிய அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து மன்னிப்புக் கோர வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.

