சென்னை: தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க வேண்டும். அதற்காக கள்ளுக்கடைகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னையில் தமிழ் நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பில் செவ்வாய்க்கிழமை (9.7.24) போராட்டம் நடத்தப்பட்டது. அத்துடன் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அனைத்து மதுக்கடைகளையும் மூடிவிடுவோம்,” என்று உறுதி அளித்திருந்தார். ஆனால், அதுவும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 65 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கள்ளச் சாராய விற்பனையையும் அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.
“இந்தத் தவறுகளை மறைக்க ரூ.10 லட்சம் இழப்பீடு தருகிறது அரசு. அதுவும் மக்களின் வரிப்பணத்தில் இழப்பீடு வழங்கப்படுகிறது.
தமிழ் நாடு குடிகார மாநிலமாவதைத் தவிர்க்க வேண்டுமெனில், முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
“தமிழகம் முழுதும் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினால் மது விரும்பிகளால் குடியை உடனடியாக நிறுத்துவது என்பது இயலாத ஒன்று என்று கூறலாம். அதற்கு அவர்களுக்குக் கால அவகாசம் தேவைப்படும். அதற்காகத்தான் மாற்றுவழியாக கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
இதனால் தென்னை விவசாயிகள் முதல் பனை விவசாயிகள் வரை பயனடைவார்கள். ஏற்கெனவே கள்ளுக்கடைகளைத் திறக்க முற்பட்டபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த முறை துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் வாங்கிக் கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என அருண்குமார் கூறியுள்ளார்.