தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இடைத்தேர்தல்: விக்கிரவாண்டியில் விறுவிறு வாக்குப்பதிவு

2 mins read
bf1b24df-1b5c-455f-8a81-c82019e6f985
இம்முறை அதிமுக போட்டியிடவில்லை. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். - படம்: இந்து தமிழ்

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (ஜூலை 10) விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை மூன்று மணி நிலவரப்படி 64.44% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

புதன்கிழமை காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மாலை வரை வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

இடைத்தேர்தலுக்கான பாதுகாப்புப் பணியில் மத்திய துணை ராணுவ படையினர் 220 பேர் உட்பட 2,651காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

வரும் 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வாக்காளர் பட்டியலின்படி இத்தேர்தலில் வாக்களிக்க 2.37 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

புதன்கிழமை 276 மையங்களில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், திமுகவினர் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ஒரு வாக்குக்கு ரூ. 6 ஆயிரம் கொடுத்துள்ளதாக பாமக வேட்பாளர் சி.அன்புமணி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் ஆறு இடங்களில் வாக்குப்பதிவு அரைமணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.

முன்னதாக விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி காலமானதை அடுத்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இம்முறை அதிமுக போட்டியிடவில்லை என்று அதன் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து, திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைவேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்