திருப்பூர்: தெரு நாய் தொல்லை அதிகரித்து வருவதால் திருப்பூர் மக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேளம்பாளையம் பகுதி செயலாளர் நந்தகோபால் வலியுறுத்தி உள்ளார்.
இல்லையெனில் தெரு நாய்களைப் பிடித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
வேளம்பாளையம் பகுதியில் பலர் தெரு நாய்க்கடிக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர். நடைப்பயற்சி செல்லும் முதியவர்கள், அதிகாலையில் விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்வோர், வணிகர்கள், நாளிதழ் விநியோகம் செய்வோர் என ஏராளமானோர் தெருநாய்க்கடிக்கு ஆளாகின்றனர்.
திடீரென சாலையின் குறுக்கே செல்லும் நாய்களால் வாகனமோட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இருசக்கர வாகனமோட்டிகள் கீழே விழுந்து அடிபட்டு உயிரிழக்கும் அவலமும் ஏற்படுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 263 பேரைத் தெரு நாய்கள் கடித்துக் குதறி உள்ளன.
“நாள்தோறும் சராசரியாக 20 முதல் 30 பேர் வரை நாய்க் கடிக்கு சிகிச்சை பெறுகின்றனர். நடப்பு ஆண்டில் மட்டும் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் மட்டும், 1,158 பேர் தெரு நாய்க் கடிக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலை மாற வேண்டும்,” என்கிறார் நந்தகுமார்.

