காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் செல்வோம்: தமிழக அரசு

காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் செல்வோம்: தமிழக அரசு

2 mins read
f02d059f-0ced-4452-a8a9-9fd5675a3456
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். - படம்: ஊடகம்
multi-img1 of 2

சென்னை: காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கர்நாடக அரசு சொல்வது சிறுபிள்ளைகள் தங்களது விளையாட்டின்போது அழுகுணி ஆட்டம் ஆடுவதுபோல் இருப்பதாகக் கூறியுள்ளார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

இந்த ஒழுங்காற்றுக் குழு என்பது தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. தமிழகம், கர்நாடகம் என இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான ஒரு குழு. இது உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்திற்குத் தினமும் ஒரு டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிடும்படி கர்நாடகத்திற்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த உத்தரவை எதிா்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகக் கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.

“தற்போது காவிரி அணைகளில் 60 டிஎம்சி தண்ணீர்தான் இருப்பு உள்ளது. இது எங்களுடைய விவசாயப் பணிகளுக்குத் தேவைப்படுவதால், இந்த மாத இறுதி வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கமுடியாது.

“இந்த விவகாரம் குறித்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க உள்ளோம்,” என்று மேலும் அவர் கூறியுள்ளார்.

கர்நாடக அரசின் இம்முடிவு தமிழக விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சூழலில், காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ‘தினத்தந்தி’ செய்தியாளர்களிடம் பேசியபோது, “கர்நாடக அணைகளில் உள்ள மொத்த நீரையும் கணக்கெடுத்து, அதில் கர்நாடகத்தின் தேவைக்குப் போக மீதமுள்ள நீரில் தமிழ்நாட்டுக்கு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீரை ஜூலை மாதம் இறுதி வரை வழங்கவேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது.

“இந்த உத்தரவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கர்நாடக அரசு அடம்பிடிப்பது சரியல்ல.

“இதே ஒழுங்காற்றுக் குழு தமிழ்நாட்டுக்கும் கூட பலமுறை பாதகமான கருத்துகளைக் கூறி இருக்கிறது.

“உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சொல்வது அரசியல் சட்டத்தை மீறும் செயலாகும்.

“உச்ச நீதிமன்றம் கர்நாடகத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. இந்தியா முழுவதற்கும் பொதுவானது.

“தமிழ்நாடும் காவிரி விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லும்.

“இவ்விவகாரத்தில் பிரச்சினை எழாமல் இருக்க ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை ஏற்று நடப்பதுதான் அண்டை மாநிலங்களுக்கு இடையேயான நட்புறவை பேணவும் பலப்படுத்தவும் சிறந்த வழியாக அமையும்.

“இது தெரியாதவரல்ல கர்நாடக முதல்வர் சித்தராமையா. நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கும் இது நன்றாகத் தெரியும்,” என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்