‘மங்காத்தா’ பாணியில் ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவன்; ரவுடியுடன் கூட்டு சேர்ந்த முன்னாள் காவலர்

2 mins read
d14818d6-fdf6-4d0f-a9cd-02cb9fcf6df4
கடத்தல் கும்பலுடன் கூட்டு சேர்ந்த முன்னாள் காவலர் செந்தில்குமார். - படம்: ஊடகம்

மதுரை: ‘மங்காத்தா’ திரைப்பட பாணியில், மதுரையில் பள்ளிக்குச் சென்ற 14 வயது சிறுவனை ஆட்டோ ஓட்டுநருடன் கடத்திச் சென்று, ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் தொடர்பில், கடத்தல் கும்பலைச் சேர்ந்த நெல்லை ரஹ்மான்பேட்டையைச் சேர்ந்த அப்துல்காதர், தென்காசி சிவகிரி பகுதியில் உள்ள வீரமணி, காளிராஜ் ஆகிய மூவரைத் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

குறிப்பாக, இந்தக் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது காவல்துறை பணியின்போது இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவலர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலும் தெரியவந்துள்ளது.

மதுரை மாநகரின் விவேகானந்தர் தெருவில் வசிப்பவர் ராஜலட்சுமி. இவரது மகன் வழக்கம்போல் பள்ளிக்கு ஆட்டோவில் சென்றபோது ஆம்னி காரில் வந்த கும்பல் ஒன்று சிறுவனையும் ஆட்டோ ஓட்டுநரையும் கடத்திச் சென்றது.

இதனையடுத்து, ரூ.2 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த கும்பல் குறித்து எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் ராஜலட்சுமி புகார் அளித்தார்.

காவலர்கள் தங்களை வலைவீசித் தேடுவதை அறிந்த கும்பல், மாணவனையும் ஆட்டோ ஓட்டுநரையும் ஒரு காட்டுக்குள் இறக்கிவிட்டு தப்பியது.

அதன்பின்னர், இருவரையும் காவல்துறையினர் அழைத்து வந்தனர்.

இதையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த வழக்கு விசாரணையில், மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் அவருக்குச் சொந்தமான வளாகத்தை மாணவனின் தாயார் ராஜலெட்சுமியிடம் விற்பனை செய்த நிலையில், அதற்கான 1.5 கோடி ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி தலைமையில் சிறுவன் கடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்