முதல்வர் ஸ்டாலின்: மக்கள் எங்கள் பக்கம்

3 mins read
16c81ff1-6b3e-4f85-853a-fad8dd82d654
திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். - படம்: தமிழக ஊடகம்
multi-img1 of 2

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஏறக்குறைய 67,167 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றிவாகை சூடியுள்ளார்.

பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,030 வாக்குகளுடன் இரண்டாம் இடம் வகித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,009 வாக்குகளைப் பெற்று வைப்புத் தொகையை இழந்தார்.

இதனைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கும் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்ட திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், “மக்களோடு இருக்கிறோம், மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்,” என்றார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (ஜூலை 13) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதை அடுத்து இனிப்புகளை வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் உற்சாகக் கொண்டாட்டங்களில் திமுக தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், சென்னையில் திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்திலும் திமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “கள்ளக்குறிச்சி சோக சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை என்ற இந்த இரு பெரும் சவால்களுக்கு மத்தியில், முதல்வர் ஸ்டாலினின் நேர்மையான ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு திமுக வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறது,” என்று கூறினார்.

தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.

விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய புகழேந்தி உடல்நிலை குன்றி மறைவெய்தியதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளராக அன்னியூர் சிவாவை அறிவித்தோம்.

“நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியில் இருந்து எழ முடியாமல் இருந்த அதிமுக, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போட்டியில் இருந்து பின்வாங்கியது. பாஜக, தனது அணியில் இருக்கும் பாமகவை நிறுத்தியது.

“தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பாஜக அணி. அவதூறுகளையும் பொய்களையும் திமுக மீதும் குறிப்பாக என் மீதும் பரப்பிய வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இடைத்தேர்தல் முடிவுகள்தான் தமிழக மக்களின் மனநிலை என்று நினைத்தால் அது தவறானது. இதற்கு முன்பு அப்படி இருந்ததில்லை. இப்போதும் அப்படி இருக்கப் போவதில்லை.

“எனினும் மக்களின் முடிவை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்த மாற்று கருத்து கூறினாலும் மக்களின் வாக்கு வாக்குதான். முதல்முறையாக கூட்டணிக் கட்சிகள் இணைந்து களப்பணியாற்றி இருக்கிறார்கள்.

“அரசின் அதிகார பலம், பணபலத்தைத் தாண்டி மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். வருகிற காலம் கண்டிப்பாக மாறும். 2026ஆம் ஆண்டில் திமுக ஆட்சி பலத்தை இழக்கும்,” என்று கூறினார்.

 “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பாமக தலைவணங்கி ஏற்கிறது. ஆளுங்கட்சி சார்பில் பணமும் பரிசுகளும் வாக்காளர்களுக்கு வாரி இறைக்கப்பட்டுள்ளது.

“அப்படி இருந்தபோதிலும், அவற்றை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு வாக்காளர்கள் நேர்மையாகப் பாமக வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர். இது ஜனநாயகத்துக்கும் பாமகவின் மக்கள் பணிக்கும் கிடைத்த வெற்றியாகும்.

“அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் உண்மையான வெற்றி என்பது பாமகவுக்குத்தான் கிடைத்துள்ளது,” என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்