சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக அரக்கோணம் மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அதிமுகவில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருக்கு எக்காலத்திலும் இடமில்லை என்று தெரிவித்தார்.
ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே இணக்கமான சூழல் நிலவுவதால் 2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் சீமானையும் இணைக்கவேண்டும் என்று நிர்வாகிகள் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பழனிசாமி பேசியபோது, இளைஞர்களுக்கு அதிக அளவில் பொறுப்புகளை வழங்க வேண்டும் என்றும் 2026 தேர்தலில் வெற்றி நமக்குத்தான் என்ற மனநிலையுடன் பாடுபடவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, தஞ்சாவூர் தொகுதி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு சிலர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை கட்சியில் சேர்க்கக்கூடாது என்றும் சில நிர்வாகிகள் சசிகலாவைச் சேர்க்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோருக்கு எக்காலத்திலும் அதிமுகவில் இடமில்லை என பழனிசாமி திட்டவட்டமாகக் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

