தஞ்சாவூர்: பாதுகாப்பு மையங்களில் உள்ள கடவுள் சிலைகளை, உரிய கோவில்களில் ஒப்படைத்து, வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற காவல்துறை ஐஜி பொன் மாணிக்கவேல் வலியுறுத்தி உள்ளார்.
தஞ்சையில் ஆன்மிக அமைப்புகள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழகத்தில் உள்ள கோவில்களை நிர்வகிக்கும் அறநிலையத் துறையினர், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகச் சாடினார்.
“அவர்கள் அதர்மக் காரியங்களில் ஈடுபட்டு, அதிகப்படியான செலவுக் கணக்குகளை காண்பித்து, கோவில்களை லாபம் ஈட்டும் வியாபாரத் தலங்களாக மாற்றி வருகின்றனர்.
“தமிழகத்தில் உள்ள சைவ, வைணவ மடங்களையும் முடக்கி, மடங்களுக்குச் சொந்தமான கோவில்களையும் நிலங்களையும் தனது பிடிக்குள் கொண்டுவர அரசு முயற்சிக்கிறது.
“பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட, வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சுவாமி சிலைகள், பல்வேறு மாவட்டங்களில் உள்ள உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அந்தந்த கோயில்களுக்கே வழங்கி, பூசைகள் நடத்தி, பக்தர்கள் வழிபட அனுமதிக்க வேண்டும்,” என்றார் பொன். மாணிக்கவேல்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டு, தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் வைக்கப்பட்டுள்ள ராஜராஜ சோழன், லோகமாதேவி ஆகிய சிலைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என அவர் குறிப்பிட்டார்.