திண்டுக்கல்: பழநியில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு 12 நாடுகளில் இருந்து வந்த 1,003 ஆய்வுக் கட்டுரைகள் வந்துள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பழநியில் நடைபெற உள்ள இந்த மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், ‘‘முருகன் மாநாட்டுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்தும் 1,003 ஆய்வுக் கட்டுரைகள் வந்துள்ளன,” என்றார்.
இந்த ஆய்வுக் கட்டுரைகளை சிறப்புக் குழு ஒன்று பரிசீலிக்கும் என்று குறிப்பிட்ட அவர், அவற்றில் தகுதிவாய்ந்த கட்டுரைகள் அனைத்தும் ஆய்வு மலரில் இடம்பெறும் என்றார்.