தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின் கட்டண உயர்வுக்கு அதிமுக, பாஜக, பாமக கட்சிகள் கண்டனம்

3 mins read
bb33b1e6-f528-4365-bf32-3584f180c7fc
படம்: - இந்திய ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் மின் கட்டணம் 4.83 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னதாக கடந்த 2022 செப்டம்பர் மாதம் மின் கட்டணம் 30 விழுக்காட்டுக்கு மேல் உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2.18 விழுக்காடு மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. தற்போது 4.83 விழுக்காடு மின் கட்டணத்தை தமிழக அரசு மீண்டும் உயர்த்தியுள்ளது. இதுதொடர்பான விளக்கத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் வழங்கியுள்ளது.

அதிகரித்துவரும் நிதி இழப்பை ஈடு செய்யவே மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாக கழகம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகப்படியான மின்கட்டண உயர்வினால் மின் பயனீட்டாளர்களுக்கு ஏற்படக் கூடிய சுமையினை கருத்தில் கொண்டு, பயனீட்டாளருக்குப் பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆண்டுதோறும் சிறிய அளவில் மின் கட்டண உயர்வை அரசு அமுல்படுத்தி வருவதாகவும் அது கூறியது.

இந்நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசுக்குத் தன் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். “நாடாளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருக்கிறார் திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின்,” எனத் திமுக ஆட்சியை சாடினார்.

அண்ணாமலை

மின் உற்பத்தியைப் பெருக்காமல், விலைக்கு வாங்கும் மின்சாரத்தின் அளவை அதிகரித்துக் கொண்டே இருந்தால், மீண்டும் மீண்டும் மின் கட்டண உயர்வுக்குத் தான் வழிவகுக்கும் எனத் தனது எக்ஸ் பதிவில் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள தமிழக அரசுக்குத் தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். மின் கட்டண உயர்வு ஒவ்வொரு குடும்பத்தின்மீதும் மாதமொன்றுக்கு சராசரியாக குறைந்தபட்சம் 500 ரூபாய் கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

“ஏற்கெனவே, உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணங்களால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் புதிய கட்டண உயர்வு ஏழை மக்களையும், தொழில் நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கும். எனவே, மின்சாரக் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் பா.ம.க. மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தும்,” என்று கூறியுள்ளார் திரு அன்புமணி.

முத்தரசன்

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து, நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை வெகுவாக குறைக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

“தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 20 காசு முதல் 55 காசு வரை உயர்த்தி அறிவித்துள்ளது. மத்திய அரசின் நிர்பந்தத்தால், கடந்த ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட மாதம் தோறும் நிலைக் கட்டணம் வசூலிக்கும் முறை இப்போதும் தொடர்வது சரியல்ல. இது மாற்றப்படாமல் நிலைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மின் விநியோகத்தைத் தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்துடன் மத்திய அரசு 2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்துள்ள மின்சார திருத்தச் சட்ட மசோதா பரிசீலனையில் இருக்கும் நிலையில், அதன் நோக்கத்தை நிர்வாக உத்தரவுகள் மூலம் நிறைவேற்ற முயற்சித்து வருகிறது.

அதன்படி ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. அதற்கு இசைவாக ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு வருகிறது. மானிய சலுகைகள் கொண்ட மின்கட்டணம் நிர்ணயிக்கும் மாநில அரசின் உரிமை பறிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்