அணு உலையால் நெல்லை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்

அணு உலையால் நெல்லை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம்

2 mins read
c6eb1635-70fd-4910-aa44-9285864540fa
படம்: - இந்திய ஊடகம்
Google News Preferred Icon

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் புதிய துறைமுகத்திற்காக எழுப்பப்படும் சுவரால் கடலின் சீற்றம் அதிகமாவதாகவும் அணு உலையிலிருந்து வெப்ப நீர் கடலுக்குள் வெளியேற்றப்படுவதால் மீன் பிடிக்கும் தொழில் பாதிக்கப்படுவதாகவும் நெல்லை மீனவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் கடலோரப் பகுதியில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் முதல் இரண்டு அணு உலைகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டுவரும் நிலையில், மேலும் நான்கு அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன.

மேலும், அணு உலைகளில் இருந்து வெப்பநீரை வெளியேற்றுவதற்கும் கடலுக்குள் இரண்டு இடங்களில் தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. ரஷ்யாவில் இருந்து அணு உலை அமைக்கத் தேவையான கனரக உதிரி பாகங்களை கடல் மார்க்கமாக கொண்டு வருவதற்காக இப்பகுதியில் சிறிய துறைமுகம் ஒன்று ஏற்கனவே செயல்பட்டு வந்தது. இதனிடையே, அப்பகுதியில் மற்றொரு சிறிய துறைமுகம் அமைக்க கூடங்குளம் அணுமின் நிலையம் முடிவு செய்தது.

அதன்படி தற்போது துறைமுகம் அமைப்பதற்காக கடல் பகுதியில் 2 கி.மீ தூரத்திற்கு கற்கள் கொட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. கடலுக்குள் ராட்சத பாறைகள் போடப்பட்டு சுவர் எழுப்புவதால் ஏற்படும் அழுத்தம் காரணமாக, அருகில் உள்ள இடிந்தகரை மீனவ கிராமம் கடல் அரிப்பால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

“அணு உலையில் இருந்து வெளியேறும் வெப்ப நீரை நேரடியாக கடலில் கலக்காமல் இருக்க அணுமின்வாரியம் சார்பில் இப்பகுதியில் ஒரு பாலம் கட்டப்படுகிறது. இதனால் இப்பகுதியில் கடல் அலைகளின் சீற்றம் அதிகரித்துள்ளது.

“இதனால் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வது கடினமாகி உள்ளது. எங்கள் மீனவ கிராமத்தில் 6 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்,” என இது குறித்து அப்பகுதி மீனவர் நிரஞ்சன் என்பவர் ‘இடிவி பாரத்’ செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்