தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் ஒரே மாதத்தில் மற்றொரு அரசியல்வாதி வெட்டிக் கொலை

2 mins read
6e87b754-29f6-43d1-b47c-99319e088113
மதுரையில் கொலை செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன். - படம்: இந்திய ஊடகம்

மதுரை: மதுரையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) காலையில், நாம் தமிழர் கட்சி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் துரத்தித் துரத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரே மாதத்தில் தமிழகத்தில் அரங்கேறியிருக்கும் இரண்டாவது அரசியல் படுகொலை இது. இம்மாதம் 5ஆம் தேதி சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். அந்த அதிர்வலைகள் அடங்குவதற்குள் மதுரை வடக்குத் தொகுதி துணைச் செயலாளரை கும்பல் ஒன்று ஓட ஓட வெட்டிக் கொலை செய்துள்ளது.

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவரான பாலசுப்பிரமணியன் ஜூலை 16ஆம் தேதி காலை தல்லாகுளம் பகுதியில் உள்ள வல்லபாய் ரோட்டில் சென்றபோது கும்பல் ஒன்று வழிமறித்து அவரிடம் தகராறு செய்தது. பின்னர், அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்திகளைக் கொண்டு சுப்பிரமணியத்தைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பினர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தக் காவல்துறையினர் பாலசுப்பிரமணியனின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில், பாலசுப்பிரமணியனுக்கும் அவரது நெருங்கிய உறவினர் ஒருவருக்கும் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யாவிட்டால் போராட்டம்

“நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணைச்செயலாளரைப் படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால், போராட்டம் வெடிக்கும்,” என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், “ஈடுசெய்ய முடியாதப் பேரிழப்பைச் சந்தித்திருக்கும் பாலசுப்பிரமணியனின் குடும்பத்தாரை எவ்வாறு ஆற்றுப்படுத்துவதென்று தெரியாது கலங்கி நிற்கிறேன். இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது. மனது கனக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு சீர்கெட்டுள்ளது என்பதையே இச்சம்பவம் காட்டுகிறது,” என்றார் திரு சீமான்.

“அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்குமே பாதுகாப்பு இல்லையென்றால், எளிய மக்களுக்கு இம்மாநிலத்தில் என்ன பாதுகாப்பு இருக்கப்போகிறது? இதென்ன தமிழகமா? இல்லை உத்திரப்பிரதேசமா? எங்குப் பார்த்தாலும் வன்முறைத்தாக்குதல்கள், கொலைகள், போதைப்பொருட்களின் புழக்கம், ரவுடிகளின் அட்டூழியம், கூலிப்படைக் கலாசாரம், கள்ளச்சாராய விற்பனை என தமிழகத்தின் நிலை மோசமாக இருக்கிறது,” என அவர் தமிழக அரசை சாடினார்.

குறிப்புச் சொற்கள்