சென்னை: தமிழகத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோரில் குறைந்தது பத்து விழுக்காட்டினர் பாதப் புண்களால் அவதிப்படுகின்றனர் என 2022ஆம் ஆண்டுத் தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது.
மேலும், இந்தப் புண்ணால் நோயாளிகள் தங்கள் கால்களை இழக்கும் அபாயம் அதிகரிக்கிறது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டச் சுகாதாரத் துறையின் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், நீரிழிவு நோயாளிகள் புண்களால் தங்கள் கால் மற்றும் கைகளை இழப்பதைத் தடுக்கத் தமிழகம் முழுவதும் “பாதம் காப்போம்” திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழகச் சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் திங்கட்கிழமை வெளியிட்டார்.
“மாவட்ட மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாதங்களுக்கெனத் தனி சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்,” என்றார் அவர்.
சென்னையில் மருத்துவர்களுக்கான பயிற்சித் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், “ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளர்களுக்குப் பாதங்களுக்கான சிகிச்சை நிலையம் அமைப்பதற்குப் பயிற்சி அளிக்கப்படும். ஒருங்கிணைந்த பாதம் காப்போம் திட்டம் ரூபாய் 26.62 கோடி செலவில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்,”என்றார் திரு சுப்பிரமணியன்.