267 கிலோ தங்க கடத்தல்: சென்னையில் இரண்டு கடைகளில் சுங்கத்துறையினர் சோதனை

2 mins read
1b7e25e6-b918-4d02-a5ef-923c2404011d
விமான நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்படும் கடத்தல் தங்கம், சென்னையில் சில கடைகளில் பதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு தங்கம் கடத்தி வரப்படுவது அதிகரித்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 267 கிலோ தங்க கடத்தல் தொடர்பாக சென்னையில் உள்ள இரண்டு கடைகளில் சுங்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சென்னை அண்ணாசாலை, எழும்பூர் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில் இயங்கி வரும் இரண்டு கடைகளிலும் இ்ந்தச் சோதனை நீண்ட நேரம் நடத்தப்பட்டதாக தெரிகிறது.

அண்மையில் சென்னை விமான நிலையத்தில் இயங்கி வந்த ஒரு கடையின் மூலம் ரூ.167 கோடி மதிப்புள்ள 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டது அம்பலமானது.

கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் 60 நாள்களுக்குள் இந்த தங்கத்தை கடத்தி உள்ளனர். இதையடுத்து கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விமான நிலைய கடை உரிமையாளர் சபீர் அலி உள்ளிட்ட ஒன்பது பேர் சுங்கத்துறையில் கைது செய்யப்பட்டனர்.

கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் சிலர் பணியில் அலட்சியமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பணியிட மாற்றத்துக்கு ஆளாகினர்.

இதற்கிடையே, குடியுரிமை துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த சரவணன் என்பவரும் திடீர் என பணி நீக்கம் செய்யப்பட்டார். அவரது அதிகாரிகள் இருவரும் பணியிடை நீக்க நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர்.

இம்மூவருக்கும் போலிக் கடப்பிதழ் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தங்கக் கடத்தல் தொடர்பாக பிருத்வி என்பவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இவர் ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டார் என்றும் இதன் மூலம் தங்கக் கடத்தலுக்கு உதவிகரமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிருத்வியுடன் தொடர்புடைய இரண்டு இடங்களிலும் சுங்கத்துறை அதிகாரிகள் விரிவான சோதனை மேற்கொண்டனர்.

அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்றும் அவற்றின் மூலம் கடத்தல் வலைப்பின்னலில் யார் யாருக்குத் தொடர்புள்ளது என்பது தெரியவரும் என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்