கோயம்புத்தூர்: தமிழ்நாட்டின் திருச்சி, கோயம்புத்தூர், கர்நாடகாவின் மங்களூர் ஆகிய நகரங்களிலிருந்து அபுதாபிக்கு நேரடி விமானச் சேவையைத் தொடங்குவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
மங்களூரிலிருந்து அபுதாபிக்கு 9.8.2024ஆம் தேதியிலும் கோவையிலிருந்து 10.8.2024ஆம் தேதியிலும், திருச்சியிலிருந்து 11.8.2024ஆம் தேதியிலும் அந்தச் சேவைகள் தொடங்கப்படவுள்ளன.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள மூன்று தென்னிந்திய நகரங்களையும் சேர்த்து இந்தியாவின் 13 நகரங்களில் இருந்து அபுதாபிக்கு மொத்தம் 89 நேரடி விமானச் சேவைகள் வழங்கப்படுகின்றன என்று அதன் விற்பனைப் பிரிவுத் தலைவர் வினய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
திருச்சியிலிருந்து வாரத்திற்கு நான்கு நாள்களும், மங்களூரிலிருந்து வாரம் ஏழு நாள்களும் கோயம்புத்தூரிலிருந்து வாரத்திற்கு மூன்று நாள்களும் இந்த நேரடி விமானச் சேவை வழங்கப்படும் என்றும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தொழில் நகரமான கோவை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் நகரங்களுக்கு மட்டும் பன்னாட்டு விமானச் சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், கோவையிலிருந்து துபாய், அபுதாபிக்கு விமானச் சேவை தொடங்கப்பட வேண்டும் என்று அங்குள்ள தொழில் நிறுவனங்களும் மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதையடுத்து, தற்போது இண்டிகோ விமான நிறுவனம், கோவை - அபுதாபி நகரங்களுக்கு இடையே நேரடி விமானச் சேவையை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து கோவை பன்னாட்டு விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “கோயவையிலிருந்து அபுதாபிக்கு இண்டிகோ விமான நிறுவனம் சார்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி விமானச் சேவை தொடங்கப்படவுள்ளது. அந்தச் சேவைகள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வழங்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அபுதாபியிலிருந்து இரவு 12.40 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானம் காலை 6.25 மணிக்கு கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்துசேரும். அவ்விமானம், கோவையிலிருந்து காலை 7:40 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணியளவில் அபுதாபி சென்று சேரும் என்று கூறப்படுகிறது.