‘முன்னாள் எம்எல்ஏ பெயருக்கு மாற்றப்பட்ட 41 ஏக்கர் வனத்துறை நிலம்’

‘முன்னாள் எம்எல்ஏ பெயருக்கு மாற்றப்பட்ட 41 ஏக்கர் வனத்துறை நிலம்’

கோப்புப்படம்

18 Jul 2024 - 8:17 pm

2 mins read

சென்னை: திருமுல்லைவாயிலில் வனத்துறைக்குச் சொந்தமான ஏறக்குறைய 41 ஏக்கர் நிலத்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஞானசேகரன், வருவாய்த் துறை நிலம் என வகைமாற்றம் செய்து, அதில் ஒரு பகுதியை தனது பெயருக்கு மாற்றியுள்ளார்.

இது சட்ட விரோதமானது என்பதால் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தை மீட்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று திருமுல்லைவாயிலைச் சேர்ந்த டி.எச்.ராஜ்மோகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

1942ஆம் ஆண்டு மேற்கண்ட நிலம் இம்பீரியல் கெமிக்கல் நிறுவனத்துக்கு நிபந்தனைகளுடன் குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் பெயர் ‘கிரசன்ட் டைஸ் அண்ட் கெமிக்கல்’ என்று 1983ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் தன் அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்தி வனத்துறைக்குச் சொந்தமான அந்த நிலத்தை வருவாய்த்துறை நிலமாக மாற்றியுள்ளார் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.எச்.ராஜ்மோகன் தாக்கல் செய்த அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, “பாதுகாக்கப்பட்ட (ரிசர்வ்) வனப்பகுதி எப்படி தனி நபரது பெயருக்கு மாற்றப்பட்டது?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு மாநில அரசு சார்பில், இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது.

அதையடுத்து, வனத் துறைக்குச் சொந்தமான பாதுகாக்கப்பட்ட நிலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது எப்படி என்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையரை நியமித்துள்ளது.

வழக்கறிஞர் ஆணையர் இந்த வழக்கு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு 15 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்