சென்னை: குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு மீது அவதூறு குற்றச்சாட்டுகளைப் பரப்பியதாக சவுக்கு சங்கர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், தவறான தகவல்களைப் பரப்பி, பொது மக்களைப் போராடத்தூண்டிய குற்றச்சாட்டையும் சவுக்கு சங்கர் எதிர்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு வரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சங்கரின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு குறித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரிக்கப்பட்டது.
அப்போது, சவுக்கு சங்கரைப் பழிவாங்கும் விதமாக சென்னையில் மட்டும் ஏழு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக கோவையிலும் தேனியிலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மாநிலம் முழுவதும் சங்கர் அலைக்கழிக்கப்படுவதாக அவரது தரப்பு வாதிட்டது.
இதையடுத்து, சங்கருக்கு ஏன் இடைக்கால பிணை வழங்கக்கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றத்திடமே விட்டுவிடுவதாகவும் அதுவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள வழக்கில் மட்டும் சங்கருக்கு இடைக்கால பிணை வழங்குவதாகவும் மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.