சென்னை: தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் ரயில் நிலையங்களில் இருந்து கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் 9,630 சிறார்கள் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்பு படையினர் இந்தச் சிறார்களை மீட்டுள்ளனர். பல்வேறு காரணங்களால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சிறார்கள் ரயில் ஏறி ஏதேனும் இடத்துக்கு சென்று விடுகின்றனர்.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தாங்கள் சென்றடையும் ரயில் நிலையங்களிலேயே மனம் குழம்பிய நிலையில் தவிப்புக்கு ஆளாகின்றனர். இவ்வாறு ஆதரவின்றி இருக்கும் சிறார்களைக் கண்டறிந்து ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்கின்றனர்.
அந்த வகையில் கடந்த 2018 முதல் 2024 மே மாதம் வரை 9,630 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

