தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோவில் நிலங்களில் ரூ.198 கோடி கனிம வளங்கள் திருட்டு

1 mins read
85cdf14c-15fe-496d-99e7-04f31bc273f1
மாதிரிப்படம்: - பிக்சாபே

சென்னை: தமிழ்நாட்டில் கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து ரூ.198.65 கோடி (S$31.9 மில்லியன்) மதிப்புள்ள கனிம வளங்கள் திருடப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, நாட்டின் வளங்களை ஒரு சில பேராசைக்காரர்கள் கொள்ளையடிப்பதை ஏற்க முடியாது என்று நீதிபதி தெரிவித்ததாக தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“நாட்டிற்குச் சொந்தமான சொத்துகளைத் திருடுவோர்மீது அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அதனால், இந்த நீதிமன்றம் முன்வந்துள்ளது. ஒரு சில பேராசைக்காரர்கள் நாட்டின் சொத்தை அபகரிப்பதை ஏற்க முடியாது.

“ஆகையால், இவ்வழக்கின் தீவிரம் கருதி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள கோவில்களின் சொத்துகளில் உள்ள கனிம வளங்களைச் சட்டவிரோதமாக திருடுவதை தடுத்து நடவடிக்கை எடுக்குமாறு சேலம் மாவட்ட காவல்துறைத் துணைத் தலைமை ஆய்வாளருக்கு உத்தரவிடப்படுகிறது,” என்று நீதிபதி தெரிவித்தார்.

அத்துடன், இந்தக் கனிமவளத் திருட்டு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை, எத்தனை குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து இம்மாதம் 26ஆம் தேதி காவல்துறை உயரதிகாரி நீதிமன்றத்தில் முன்னிலையாகி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்