சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் இரு தரப்பினர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னை தமிழ் இந்து தமிழ் திசை இத்தகவலை வெளியிட்டுள்ளது.
செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறை அண்மையில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக வழக்கு ஒன்றை பதிவு செய்தது.
இந்த வழக்கை நடத்த சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜயகுமார் ஆவணங்களை தயார் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்நாதன், செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு விபத்து வழக்குகளை வழக்கமாக தான் எடுத்து நடத்தி வருவதாகவும் அந்த விபத்து வழக்கை தன்னிடம் கொடுக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் விஜயகுமாரிடம் தொலைபேசியில் கூறியதாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து இந்த வழக்கை செந்தில்நாதனிடம் மாற்றுவதற்கான பேச்சுவார்த்தை நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது பேச்சுவார்த்தை கைகலப்பாக மாறியது. இரு தரப்பினரும் மாறி மாறி மோதிக் கொண்டனர். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்த மோதலில் வழக்கறிஞர்கள் செந்தில்நாதன், விஜயகுமார், சக்திவேல், விமல் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சம்பவம் தொடர்பில் வழக்கறிஞர் விஜயகுமார், செந்தில்நாதன், சக்திவேல், விமல் உள்பட 10 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

