சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படிப்பதற்காக லண்டன் செல்ல பாஜக மேலிடம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
‘சமயம்’ வெளியிட்டுள்ள தகவலில் இது குறித்து தெரிய வருகிறது.
தமிழக பாஜக தலைவர் பொறுப்பை அண்ணாமலை ஏற்ற பிறகு தமிழகத்தில் பாஜக குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி அடைந்துள்ளது.
இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
ஆனால் பாஜகவின் வாக்கு விழுக்காடு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அண்ணாமலை அனைத்துலக அரசியல் சார்ந்த மேற்படிப்புக்காக லண்டன் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது.
ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக் கழகம் ‘சர்வதேச அரசியல்’ என்ற தலைப்பில் ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள முக்கிய 12 அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
அந்த வகையில் இவ்வாண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 12 பேரில் ஒருவராக தேர்வு பெற்றுள்ளார்.
இந்தப் படிப்புக்காக லண்டன் செல்லும் அண்ணாமலை ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை லண்டனில் தங்கியிருப்பார் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர் அனுமதி கோரி, பிரதமர் மோடி உட்பட பாஜக தேசிய தலைவர்களிடம் கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு மேலிடம் அனுமதி வழங்கியதாகவும் தெரிகிறது.
இதற்கிடையே தமிழக பாஜக தலைமைக்கு சில நிர்வாகிகளின் பெயர்கள் அடிபட்டன.
அதே சமயத்தில் அண்ணாமலை லண்டனில் இருந்தபடியே கட்சிப் பணிகளைக் கவனிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

