சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் அவரது வீட்டின் முன் படுகொலை செய்யப்பட்டார்.
”அவர் கொலை செய்யப்பட்டதில் பல மறைமுக சூழ்ச்சிகள் இருக்கிறது. உண்மையான குற்றவாளிகளைக் காவல்துறை கண்டறிந்து நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும். அதற்காக அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் எங்களைக் காயப்படுத்த வேண்டாம்,” என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.
பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை எழும்பூரில் சனிக்கிழமை பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேர்மையான முறையில் வழக்கு விசாரிக்கப்பட்டு நீதி வழங்க வேண்டும் என்று பதாகைகள் மூலமாகவும், முழக்கங்களை எழுப்பியும் வலியுறுத்தினர்.
“இந்தக் கொலை வழக்கில் நீதி கிடைக்கும்வரை நாங்கள் ஓயப்போவதில்லை. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக நீதி கேட்டு குரல் கொடுப்பவர்களுக்கு ‘ரவுடி’ என்று பட்டம் கட்டுகின்றனர். அவர்கள் பார்வையில் நாங்கள் ரவுடிகளாக இருந்துவிட்டுப் போகிறோம். எங்களுக்கு வேண்டியதெல்லாம் நேர்மையான விசாரணை மூலம் கிடைக்கும் நீதி மட்டும்தான்,” என்று கூறியுள்ளார் பா.ரஞ்சித்.
பேரணி நிகழ்ச்சியில் மேலும் பேசிய பா.ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங்குக்கு சென்னையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், தமிழக காங்கிரஸ் பட்டியல் இனத்தவர் பிரிவின் தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார், நீதிபதி அரி.பரந்தாமன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை.ஜெகன் மூர்த்தி, இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன், சமூக சமத்துவப் படைத் தலைவர் சிவகாமி, நடிகர்கள் மன்சூர் அலிகான், தினேஷ், கானா கலைஞர்கள் சங்கம், தமிழக அரசு பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடி இனத்தவர் அலுவலர் நலச் சங்கம் உள்ளிட்ட 2000க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் சிக்கியவர்களில் அதிமுக, பாஜக, தமாகா, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதால், அனைத்துக் கோணங்களிலும் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பழிவாங்க, அவரது கூட்டாளிகள் தயாராகி வருவதாக தமிழக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய கூட்டாளியான ‘பாம்’ சரவணன் தலைமறைவாகி உள்ளார் என்றும் எதிரிகள் மீது தாக்குதல் நடத்த ரகசியத் திட்டம் தீட்டி வருவதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

