சென்னை: ‘தீண்டாமை ஒரு பெருங்குற்றம். அது ஒழிக்கப்பட வேண்டும்’ என்ற உணர்வுடன்தான் தமிழ்நாட்டின் பாடநூல்கள் உள்ளன. அதை மாணவர்கள் மனத்திலும் வலுவாக ஊன்றச் செய்வதன் மூலம்தான் சாதிய சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். அப்போதுதான் சமத்துவ இலக்கை நோக்கி நாம் முன்னேற முடியும்.
ஆனால், மாணவப் பருவத்திலேயே சாதியால் அவர்களைப் பிளவுபடுத்தி, சாதிய உணர்வைக் கெட்டிப்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் பாரதிய ஜனதா கட்சிக்கு சமத்துவத்துக்கான நடவடிக்கை எட்டிக்காயாக கசக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
அதனால்தான், நீதிபதி சந்துரு ஆணையத்தின் சமத்துவத்துக்கான பரிந்துரையை பாஜகவினர் எதிர்த்து வருகின்றனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், பள்ளி மாணவர்களிடையே சமத்துவ உணர்வை வளர்ப்பதற்காக நீதிபதி சந்துரு ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரைகளைப் படிக்காமலேயே பாஜக எதிர்க்கிறது என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சில பள்ளிகளில் நடைபெற்ற விரும்பத்தகாத தீண்டாமை குற்றங்களைக் களைவதற்கு, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தமிழ் நாடு அரசு ஓர் ஆணையத்தை நியமித்தது. அந்த ஆணையம் அதுகுறித்த விரிவான அறிக்கையை முதல்வரிடம் வழங்கியுள்ளது.
அந்த அறிக்கையின் சில தலைப்புகள் மட்டும் ஊடகங்களில் செய்தியாகின. அதை மட்டுமே வைத்துக்கொண்டு அறிக்கையின் உள்ளடக்கம் என்னவென்று முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ளாமல், அந்த அறிக்கையை நிராகரிப்பதாக பாஜக தீர்மானம் நிறைவேற்றியது கேலிக்குரியது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

