சென்னை: நீட் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக இரட்டை அடுக்கு நீட் தேர்வை இரு அமைப்புகளின் மூலம் நடத்த மத்திய அரசு திட்டம் வகுத்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்திகள் அதிர்ச்சியைத் தருவதாக உள்ளது என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இரட்டை அடுக்கு நீட் தேர்வை நடத்தும் முடிவு என்பது ஒரு தவற்றை மூடி மறைப்பதற்காக இன்னொரு பெரும் தவற்றை இழைப்பதற்கு ஒப்பாகும்.
“மேலும் இந்த இரட்டை அடுக்கு முறையிலான நீட் தேர்வு ஊரக மாணவர்களுக்கு இன்னும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
“எனவே, இத்திட்டத்தைக் கைவிட்டு ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின்போது வினாத்தாள் கசிந்தது. மேலும் சிலருக்கு மட்டும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அத்துடன் பல முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிய தேர்வை நடத்த வேண்டும் என்று பெரும்பான்மையான மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில்தான், மத்திய அரசு இரட்டை அடுக்கு நீட் தேர்வு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
“இரட்டை அடுக்கு நீட் தேர்வை அறிமுகம் செய்வதன் வழி முறைகேடுகளை ஒருபோதும் தடுக்க முடியாது.
தொடர்புடைய செய்திகள்
“மேலும், நீட் தேர்வை இரு அடுக்குகள் கொண்டதாக மாற்றுவதன் மூலம் நீட் தேர்வு மேலும் கடுமையானதாக மாற்றப்படும். அதற்காக மாணவர்கள் கூடுதல் பயிற்சி எடுக்க வேண்டிய மோசமான நிலை உருவாகும்.
“அதனால், மாணவர்களுக்கு அது எவ்விதத்திலும் பயனளிக்கக் கூடியதாக இருக்காது,” என்று திரு அன்புமணி கூறியுள்ளார்.