தமிழ்நாட்டில் முதல் முறையாக புதிய வசதி

வீட்டுக் கட்டுமானத்துக்கு இணையம் வழி உடனடி அனுமதி

2 mins read
fbff2cb2-867b-4bdd-b364-a64213a7e407
குடியிருப்பு கட்டுமானத்துக்கு இணையத்தளம் வாயிலாக அனுமதி வழங்கும் வசதியை முதல்வர் ஸ்டாலின் திங்கட்கிழமை (ஜூலை 22) தொடக்கி வைத்தார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் குடியிருப்பு கட்டுமானத்துக்கு இனிமேல் இணையத்தளம் வாயிலாக உடனடியாக அனுமதி பெறலாம்.

வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில், இந்தப் புதிய வசதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கட்கிழமை (22.7.2024) தொடங்கி வைத்தார்.

இதன்வழி அதிகபட்சம் 2,500 சதுரஅடி வரையிலான மனையில், 3,500 சதுர அடி கட்டடப் பரப்பளவிற்குள் தரைத்தளம் அல்லது தரைத்தளமும் முதல் தளம் கொண்ட 7 மீட்டர் உயரத்திற்குட்பட்டு குடியிருப்புக் கட்டடத்தைக் கட்டுவதற்கு உடனடியாக அனுமதி பெறலாம்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டட அனுமதியை எளிதாகவும் உடனடியாகவும் பெற முடியும்.

சுயசான்றிதழ் திட்டம் என்பது, பொதுமக்கள் கட்டட அனுமதிக்காக அலுவலகங்களுக்குச் சென்றுவரும் நேரத்தை முழுமையாக தவிர்த்து, அதிகபட்ச வெளிப்படைத் தன்மையுடனும், நடைமுறையில் உள்ள கட்டட விதிகளை எளிமைப்படுத்தியும் மக்கள் கடைப்பிடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியாகும்.

இத்திட்டத்தின்படி, www.onlineppa.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட எந்த அலுவலகத்துக்கும் விண்ணப்பதாரர்கள் செல்ல வேண்டியது இல்லை. கட்டடப் பணிகள் முடிந்ததும், முடிவு சான்று பெறுவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. பரிசீலனைக் கட்டணம், கட்டமைப்பு, வசதிக் கட்டணங்களில் இருந்து 100 விழுக்காடு விலக்கு அளிக்கப்படுகிறது.

தற்போதுள்ள ஒற்றைச் சாளர முறையின் மூலம் ஒப்புதல் பெறுவதைக் காட்டிலும், இந்தச் சுயசான்றிதழ் திட்டத்தில் ஒப்புதல் பெறும் நடைமுறை மிகவும் எளிதான வகையில் அமைந்து பொதுமக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும். இது தொடர்பாக, ஒற்றைச் சாளர முறையில் சுயசான்றிதழ் திட்டத்திற்கான மென்பொருள் தொகுப்பு உருவாக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் கட்டட அனுமதிக்காக இணையம்வழி விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. அதேபோல, உள்ளாட்சி அமைப்புகளிலும் இணையம் வழி அனுமதிக்காக விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.541.32 கோடியில் கட்டப்பட்டுள்ள 4,184 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் ரூ.382.84 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,459 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் வாடகை குடியிருப்புகள் வணிக வளாகங்களையும் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார்.

குறிப்புச் சொற்கள்