சென்னை: குப்பைத் தொட்டிக்குள் கிடந்த வைர நெக்லசை மீட்டு, அதனைத் தொலைத்தவரிடம் திருப்பி ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் அந்தோணிசாமியை நேரில் அழைத்துப் பாராட்டி, சால்வை அணிவித்து, ஊக்கத்தொகையை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வழங்கினார்.
சென்னை விருகம்பாக்கம், ராஜமன்னார் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தேவராஜ் என்பவர் வசித்துவருகிறார்.
இவர் ஞாயிற்றுக்கிழமையன்று தவறுதலாக ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லசை குப்பைகளுடன் சேர்த்து மாநகராட்சி குப்பை வண்டிக்குள் கொட்டியுள்ளார்.
அதன்பின்னர், நகையைத் தேடியபோது அது எங்கும் இல்லாததால், குப்பையுடன் சேர்த்து வீசியிருக்கலாம் என்பதை உணர்ந்த தேவராஜ், உடனடியாக மாநகராட்சி சார்பில் குப்பை சேகரிக்கும் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு உதவி கோரினார்.
அப்பகுதியில் குப்பைகளைச் சேகரித்து வரும் அந்நிறுவனத்தின் ஓட்டுநரான அந்தோணிசாமி, குப்பைத் தொட்டிகளில் தீவிரமாகத் தேடி குப்பையோடு குப்பையாகக் கிடந்த வைர நெக்லசை மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.
இதுதொடர்பான செய்திகளும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து தூய்மைப் பணியாளர் அந்தோணிசாமியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
நேர்மையும் கருணையும் மக்களின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவரது செயல்கள் நினைவூட்டுவதாக பலரும் குறிப்பிட்டனர்.
அந்தோணிசாமி மற்றும் குப்பை சேகரிக்கும் தனியார் நிறுவன ஊழியர்களின் விடாமுயற்சி, நேர்மைக்கு உரிமையாளர் தேவராஜ் மிகுந்த நன்றியைத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த வைர நெக்லஸ் தனது மகளுக்கு அவரது அம்மாவால் அளிக்கப்பட்ட திருமணப் பரிசு என்று தேவராஜ் கூறினார்.