மன்னார்குடி: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்படலாம் என்ற செய்தி தமிழ்நாட்டின் துளசேந்திரபுரம் கிராம மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தலில் வென்று அமெரிக்க அதிபர் ஆக வேண்டும் என்று வேண்டி அந்தச் சிறிய கிராமத்து மக்கள் கோயிலில் சிறப்புப் பூசைகளைச் செய்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
கமலா ஹாரிஸ் குடும்பம் இன்றளவும் தமிழ்நாட்டோடு நெருக்கமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
அவரது சித்தி சென்னையில் வசித்து வருகிறார். அவரது தூரத்து உறவினர்கள் சிலர் துளசேந்திரபுரம் கிராமத்தில் இன்றும் வசிக்கின்றனர்.
மேலும், கமலா ஹாரிஸ் குடும்பத்தின் குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயில் துளசேந்திரபுரத்தில் உள்ளது. அந்தக் கோயிலுக்கு கமலா ஹாரிஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நன்கொடை அளித்துள்ளார் என்ற விவரம் கோயில் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
ஜனநாயகக் கட்சி வேட்பாளராக வலம் வந்த ஜோ பைடன், போட்டியிலிருந்து விலகப் போவதாக அறிவித்ததுடன், தமக்குப் பதில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிட ஆதரவு தெரிவித்தார்.
இருப்பினும், ஜனநாயகக் கட்சி கமலா ஹாரிஸை அதிகாரபூர்வ வேட்பாளராக இன்னும் முறைப்படி அறிவிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி. கோபாலன் சுருக்கெழுத்தராக (ஸ்டெனோகிராஃபர்) வேலை செய்தார்.
அதன் தொடர்ச்சியாக குடிமைப் பணி (சிவில் சர்வீஸ்) அதிகாரியாக அவர் பணியாற்றினார். ஸாம்பியா நாட்டுக்கு அகதிகளைக் கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் பி.வி. கோபாலனை அனுப்பி வைத்தது. அப்போது அந்த நாட்டுக்குக் குடும்பத்தோடு சென்ற பி.வி. கோபாலன், பின்னர் அமெரிக்காவில் குடியேறினார்.
பி. வி. கோபாலனின் இரண்டாவது மகளான சியாமளாவுக்கும் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த அவரது கணவருக்கும் பிறந்தவர்தான் கமலா ஹாரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.