சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 22 வெறிநாய்க்கடி இறப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு முழுவதும் மாநிலம் பதிவு செய்த 18 இறப்புகளைவிட அதிகம்.
2024ஆம் ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் நாய்க் கடி ரேபிஸ் நோய் தொற்றால் 2,42,782 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதிகாரபூர்வ தரவுகளின்படி, ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 2,42,782 நாய்க் கடி சம்பவங்கள், 22 ரேபிஸ் இறப்புகள் ஏற்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் மொத்த எண்ணிக்கை 4,41,804 நாய்க் கடி சம்பவங்கள், 18 இறப்புகள். கடந்த 2022இல் 28 ரேபிஸ் இறப்புகள் பதிவுசெய்யப்பட்டன.
ஜூன் மாதம் வரை தமிழகத்தில் 7,310 பாம்பு கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2023 இல் 19,795 சம்பவங்கள் இருந்தன.
“விலங்குகள் கடித்தல் குறிப்பிடத்தக்க பொது சுகாதார பிரச்சினையாக உள்ளது,” என்று பொது சுகாதார இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வ விநாயகம் சுகாதார அதிகாரிகளுக்கு திங்கட்கிழமை எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார் பாம்பு விஷம், ரேபிஸ் தடுப்பு தடுப்பூசிகள் 24 மணி நேரமும் கிடைப்பதை உறுதி செய்யுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.