சாப்பாட்டில் ஊறுகாய் வைக்க மறந்த உணவகத்திற்கு ரூ.35,000 அபராதம்

சாப்பாட்டில் ஊறுகாய் வைக்க மறந்த உணவகத்திற்கு ரூ.35,000 அபராதம்

2 mins read
f4933c59-2c51-46ce-a713-608d01261504
ஊறுகாய்க்காக ரூ.35,000 அபராதம் விதித்த விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. - கோப்புப்படம்

விழுப்புரம்: உணவுப் பொட்டலத்தில் ஊறுகாய் வைக்காததால், ஓர் உணவகத்திற்கு ரூ.35,000 அபராதம் விதித்துள்ளது விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம்.

விழுப்புரத்தில் ஆரோக்கியசாமி என்பவர், அன்னதானம் அளிப்பதற்காக 25 பேருக்கு ஓர் உணவகத்தில் சாப்பாடு தருவித்துள்ளார். ஓர் உணவுப் பொட்டலம் ரூ.80 வீதம் ரூ.2,000 செலுத்தியுள்ளார் ஆரோக்கியசாமி.

இவர் கடந்த 2022ஆம் ஆண்டு , விழுப்புரத்தில் உள்ள `பாலமுருகன்’ என்ற உணவகத்தில் ஒரு சாப்பாட்டுப் பொட்டலம் ரூ.80 வீதம் 25 சாப்பாட்டுப் பொட்டலங்களை வாங்கினார். அதில் சாப்பாடு, சாம்பார், காரக் குழம்பு, ரசம், மோர், கூட்டு, பொரியல், அப்பளம், வாழை இலை போன்றவற்றுடன் ஒரு ரூபாய் ஊறுகாய் பொட்டலம் ஒன்று கொடுப்போம். 25 பார்சல் சாப்பாட்டுக்கு 25 ஊறுகாய்ப் பொட்டலங்கள் தருவோம் என்றும் உணவகத்தினர் கூறியுள்ளனர்.

வீட்டுக்கு வந்த உணவுப் பொட்டலங்களை அங்கு சாப்பிட வந்தவர்களுக்கு வழங்கினார். ஆரோக்கியசாமி. அவர் தருவித்த உணவுப் பொட்டலங்கள் ஒன்றில்கூட ஊறுகாயைக் காணோம். அதனால் அதிருப்தியடைந்த ஆரோக்கியசாமி, அந்த உணவகத்திற்குச் சென்று ஊறுகாய் குறித்துக் கேட்டார். உணவகத்தினரோ, ஊறுகாய் வைக்க மறந்துவிட்டோம் என்று கூறினர். பரவாயில்லை அதற்காக 25 ரூபாயைத் திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

ஊறுகாய் வைக்க மறந்துவிட்டோம். ஆனால் அதற்காக பணமெல்லாம் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டார் உணவக உரிமையாளர்.

ஊறுகாய்க்காக மனமுடைந்த வாடிக்கையாளர் ஆரோக்கியசாமி, இதுகுறித்து விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். 2022ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் குறைதீர் ஆணையத்தின் தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீரா மொய்தீன், அமலா ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

அதில், ஆரோக்கியசாமி வாங்கிய உணவுப் பொட்டலங்களில் ஊறுகாய் வைக்காதது சேவைக் குறைபாடு ஆகும். இதனால் உணவக வாடிக்கையாளர் ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக ரூ.30 ஆயிரமும், வழக்குச் செலவுக்காக ரூ.5 ஆயிரமும், ஊறுகாய்ப் பொட்டலத்திற்குரிய தொகை ரூ.25ஐயும், அவர் செலுத்திய பணத்திற்கு முறையான ரசீதும் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் மன்றம் தீர்ப்பளித்தது.

தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு இந்தத் அபராதத் தொகையை உணவக உரிமையாளர் செலுத்தத் தவறினால் 9 விழுக்காடு வட்டியுடன் பணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறிப்புச் சொற்கள்