புதுடெல்லி: புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ரூ.257 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு வெள்ளிக்கிழமை காணொளிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காணொளிக் காட்சி வாயிலாக, புதுடெல்லி சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் ரூ.257 கோடி மதிப்பிலான புதிதாக கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், புதுடெல்லி மிக தீவிர நில அதிர்வு மண்டலம் 4 ஆக மறுவகைப்படுத்தப்படுத்துள்ளதைக் கருத்தில் கொண்டு வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தின் பழைய கட்டடங்களை முழுவதுமாக இடித்து மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே, புதிதாகக் கட்டப்படவுள்ள இந்தக் கட்டடம் மிக தீவிர நில அதிர்வை எதிர்கொள்ளும் கட்டமைப்பாக வடிவமைக்கப்பட்டு, இந்திய தொழில்நுட்பக்கழகம், சென்னை மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
அதன்படி, விரிவான வடிவமைப்பு மற்றும் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலகங்களிலிருந்து உரிய ஒப்புதல்கள் பெறப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் பொதுத் துறையால் புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தை மறுசீரமைத்து புதிய கட்டடங்களைக் கட்டுவதற்கு ரூ.257 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தப் புதிய கட்டடத்தில் மிக முக்கிய பிரமுகர் பகுதி, விருந்தினர் மாளிகை பகுதி மற்றும் அலுவலர்கள் குடியிருப்புப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த கட்டடம், 3 அடித்தளங்கள், தரைத்தளம் மற்றும் 7 மேல் தளங்களைக் கொண்டதாகவும், மொத்தம் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது.
மேலும், மிக முக்கிய பிரமுகர் அறை, 39 முக்கிய பிரமுகர்கள் அறைகள், 60 உயர்தர அறைகள், 72 படுக்கை வசதிகள் கொண்ட தங்கும் கூடம், பல்நோக்கு அரங்கம், 3 உணவருந்தும் அறைகள், காத்திருப்பு அறைகள், கண்காட்சி அறை, மிக முக்கிய பிரமுகர்களின் முகாம் அலுவலகம், சந்திப்பு அறைகள், உடற்பயிற்சி மையம், வணிக மையம், நூலகம் மற்றும் பல்வேறு வசதிகளுடன் இந்தப் புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது.

