நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து தமிழகத்தில் மாபெரும் போராட்டம்

2 mins read
b1f58cde-b155-4932-8905-7d5913c7d63b
மத்திய அரசின் 2024 நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் மாநிலம் முழுவதும் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. - படம்: ஊடகம்

சென்னை: மத்திய அரசின் 2024 நிதிநிலை அறிக்கையில், தமிழ் நாட்டுக்கு எவ்வித நலத் திட்டங்களும் அறிவிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது எனக் கோரி தமிழக அரசியல் கட்சிகள் தமிழகத்தின் பல இடங்களில் சனிக்கிழமை போராட்டங்களில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.

ஆகஸ்ட் முதல் தேதியில் தமிழகம் முழுதும் மத்திய அரசு அலுவலகங்களின் முன்பு மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக அக்கட்சிகள் விடுத்துள்ள அறிக்கையில், “மோடி அரசின் நிதிநிலை அறிக்கையில் தனது ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் கட்சிகளைத் திருப்திப்படுத்தி, தமிழகம், கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சித்துள்ளது.

தமிழகத்திற்கு வரவேண்டிய புயல், மழை வெள்ள நிவாரணம், மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான எந்த நிதியும் ஒதுக்காமல் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட இடம்பெறச் செய்யாமல் தமிழ் நாட்டு மக்களை மத்திய அரசு ஏமாற்றமடையச் செய்துள்ளது.

பெரும்பாலான வரி வருவாய் அளிக்கும் மாநிலமான தமிழ் நாட்டுக்கு நலத்திட்டங்கள் அறிவிக்காமல் புறக்கணிப்பதன் மூலம் இந்த நிதிநிலை அறிக்கை கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு துரோகம் இழைக்கிறது.

இந்திய நாட்டில் ஏழை, பணக்காரர் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ள நிலையில் பெருநிறுவன முதலாளிகளுக்கு செல்வ வரி விதிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை புறந்தள்ளி பெரு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வாரி வழங்கி ஏழை, நடுத்தர மக்களை ஏமாற்றியுள்ளது. பெருநிறுவன வகுப்புவாதக் கொள்கைகளை மூர்க்கத்தனமாக அமலாக்கிடும் இந்த நிதி நிலை அறிக்கையை எதிர்த்து, அனைத்துத் தரப்பு மக்களும் கண்டனக் குரல் எழுப்பிட வேண்டுகிறோம்.

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையையும், தமிழக விரோதப்போக்கையும் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் 2024 ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும் என இடது சாரிக் கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், மத்திய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி, தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து சனிக்கிழமை சென்னையில் போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

அதேபோல், திமுகவும் சென்னையில் நான்கு இடங்களிலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் சனிக்கிழமை திமுக போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்