சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. மக்களின் வரிப்பணத்தை எடுத்து கள்ளச்சாராய உயிரிழப்புக்கு இழப்பீடாக வழங்கக் கூடாது என்று குமரேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கு வெள்ளிக்கிழமை நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில் குமார் அமர்வில் விசாரிக்கப்பட்ட அந்த வழக்கை, “அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
மேலும், எந்த ஆதாரமும் இல்லாமல் விளம்பர நோக்கத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று கூறிய நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.