ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுடன் விஜய் தீவிர ஆலோசனை

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுடன் விஜய் தீவிர ஆலோசனை

2 mins read
99994128-880f-4930-859a-dc9c4df62043
படம் திரைக்கு வந்ததும் மாநாடு பற்றிய விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் பயணத்தைத் தொடங்கிய நடிகர் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தீவிர களப்பணியில் இறங்கி வருகிறார்.

அந்த வகையில் மாவட்டம் தோறும் ஆலோசனைக் கூட்டங்கள், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் போன்றவை கட்சி சார்பில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் விஜய் வழி காட்டுதலின் பேரில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரடியாகச் சந்தித்து கட்சி வளர்ச்சி பற்றி ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.

மேலும் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்துக்கு எதிராக தமிழக அரசின் நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என அறிக்கை விட்டு விஜய் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அண்மையில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழாவில், நீட்டுக்கு எதிராக பேசிய விஜய், தமிழகத்துக்குத் தற்போது நல்ல தலைவர்கள் தேவை எனவும் பேசி அதிரடி காட்டினார்.

அண்மை காலமாக விஜய் அரசியல் நடவடிக்கை நாளுக்கு நாள் வேகம் எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் கூட்டத்தை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நடத்தி கட்சி சார்பில் விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டுக்கான பணிகள் பற்றியும், பதவிகள் வழங்கப்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் புஸ்சி ஆனந்த் பங்கேற்றார். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் பற்றி அறிவிக்க வேண்டும் என்பதால் விஜய் ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அரசியல் விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதைத் தொடர்ந்து கட்சியின் கொள்கைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு திருச்சியில் நடைபெறுவதாக இருந்த நிலையில் சேலத்தில் நடத்தலாமா என நினைத்து அங்கு சில இடங்களை புஸ்சி ஆனந்த் பார்வையிட்டார்.

மாநாட்டுக்காகத் தேர்வு செய்யப்பட்ட இடம் மற்றும் எவ்வளவு தொண்டர்கள் பங்கேற்கலாம் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு கட்சித் தலைவர் விஜய்யிடம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து மாநாடு நடைபெறும் இடத்தை விஜய் அதிகாரபூர்வமாக வெளியிட இருக்கிறார்.

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கோட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிவடைந்து வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

படம் திரைக்கு வந்ததும் மாநாடு பற்றிய விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு தமிழக அரசியலில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்