சென்னை: அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரிக்க இருந்த உயர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் தலைமையிலான அமர்வு விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது.
சவுக்கு சங்கரின் தாயார் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் மற்றும் காவல்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், “ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு குறித்து சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. அதனால் நாங்கள் விலகிக் கொள்கிறோம் எனக் கூறினர்.
வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அவர்கள், இந்த விசாரணையை மேற்கொள்ள வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வை அமர்த்துமாறு தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைத்துள்ளனர்.
சவுக்கு சங்கருக்கு அடுத்தடுத்து இரண்டு வழக்குகளில் பிணை கிடைத்த நிலையில், மூன்றாவதாக வெள்ளிக்கிழமை கோயம்புத்தூர் இணையக் குற்றப்பிரிவு வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் நான்காவது குற்றவியல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
பெண் காவலர்களையும் காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசிய வழக்கில் கோயம்புத்தூர் இணைய குற்றவியல் காவல்துறையினர் கடந்த மே 14ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கிலும் அவருக்கு பிணை கிடைத்துள்ளது.

