சென்னை: “கடல்சார் கல்விக்காக இந்தியா முழுதும் 160 கல்வி நிலையங்கள் உள்ளன. இதில் தமிழ் நாட்டில் மட்டும் 15 கல்வி நிலையங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 3,000 பேர் அக்கல்வியைப் பயிலலாம்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி வெளியான மெரைன் இன்ஜினியரிங், பிஎஸ்சி நாட்டிக்கல் சயின்ஸ் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு குறித்த விளம்பரத்தில் முழுமையான தகவல்கள் இடம்பெறவில்லை.
குறிப்பாக, அடித்தட்டு மாணவர்களைப் புறக்கணிக்கும் நோக்கில் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், திடீரென கடந்த ஜூன் 8ஆம் தேதி இணையம் வாயிலாக தனியார் மூலமாக நுழைவுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
எனவே, கடல்சார் பல்கலைக் கழகம் நடத்திய நுழைவுத் தேர்வுக்குத் தடை விதிக்கக் கோரியும் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி மறுதேர்வு நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,” என்று மாணவர் சார்பில் எஸ்.சித்தார்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி முன்னிலையாகி, “இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்களுக்கான வாய்ப்பை தட்டிப் பறிக்கும் நோக்கிலேயே இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது,” எனக் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.