சென்னை: குழந்தைகளுக்கான தடுப்பூசியை சில தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.
இந்தத் திட்டம் விரைவில் நடப்புக்கு வர உள்ளதாக சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். இதன் கீழ் பிறந்த குழந்தைகளுக்கு முதல் மாதத்தில் இருந்து 16 தவணை செலுத்தப்படும் தடுப்பூசிகளை இலவசமாகப் பெறலாம்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், தனியாரை பொறுத்தவரை தற்போது ஒரு அரசாணையை பிறப்பித்துள்ளோம். அதன்படி, குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் இந்த திட்டம் இடம்பெறாது என்று கூறிய திரு செல்வ விநாயகம், தடுப்பூசிகளைக் குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்திருக்கும் வகையில் வசதிகள் இருப்பது அவசியம் என்று தெரிவித்தார்.
இதற்கு சில வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன என்று குறிப்பிட்ட அவர், “தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசியை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும். அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் வசூலிப்பதில்லை என்று உறுதி அளிக்கும் பட்சத்தில், சில மையங்கள் திறக்கப்படும்,” என்றார்.