தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் இல்லை: அமைச்சர் மூர்த்தி

2 mins read
964c5ea2-7b3b-48b5-9fb9-cd0cc06dfe51
கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்கள் கட்டணமின்றி செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். - படம்: ஊடகம்

மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக திங்கட்கிழமை (ஜூலை 29) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 2020ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த நடைமுறையை பின்பற்ற முடிவெடுக்கப்பட்டது.

“மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரத்தில் பழைய நடைமுறைப்படி உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை. சுங்கச்சாவடியை சுற்றியுள்ள 7 கி.மீ. தூர சுற்றுவட்டார பகுதி மக்கள், ஆதார் அட்டை கொண்டு வந்தால் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது. 2020ஆம் ஆண்டைப் போலவே உள்ளூர் மக்கள் சுங்கக் கட்டணம் இல்லாமல் சுங்கச்சாவடியில் செல்லலாம். உள்ளூர் மக்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையூறு செய்யக்கூடாது,” என்று அமைச்சர் பி.மூர்த்தி உறுதியளித்தார்.

ஏற்கெனவே விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரத்து செய்யுமாறு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். அதேநேரத்தில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் செவ்வாய்க்கிழமை திருமங்கலத்தில் திட்டமிட்டபடி முழு அடைப்பு நடத்தப்படும் என போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

மதுரை திருமங்கலம் அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாக அதை அகற்ற வேண்டும் என்று கடந்த பல ஆண்டாக திருமங்கலம் சுற்றுவட்டார கிராம மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம் பகுதி சுற்றுவட்டார கிராம மக்களுக்கு மட்டும் கப்பலூர் சுங்கச்சாவடியில் இலவசமாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அண்மையில் திடீரென்று, கப்பலூர் சுங்கச்சாவடியை ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம், அவர்களுக்கு அளிக்கப்பட்ட இலவச அனுமதியை ரத்து செய்தது. இதனால் அம்மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுடன் அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் 4 கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போதும் சுமுக தீர்வு காணப்படாததால் சுங்கச்சாவடி எதிர்ப்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை திருமங்கலத்தில் முழு அடைப்பு நடத்தப்போவதாக அறிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்