தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போக்குவரத்துத்துறை தனியார் மயமாக்கப்படாது: அமைச்சர் உறுதி

2 mins read
34e5c015-9071-41bc-87ca-1cf2e0c7d791
போக்குவரத்து துறை எக்காரணத்தைக் கொண்டும் தனியார்மயமாக்கப்படாது தமிழகப் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார் - படம்: தமிழக ஊடகம்

சென்னை: போக்குவரத்துத்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற செய்தி வதந்தி என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.

அரசைக் குறை கூறவும், அரசியல் நோக்கத்திற்காகவும் சர்ச்சை எழுப்பப்படுகிறது எனவும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணி, தனியாருக்கு டெண்டர் விடுவதாக வந்த செய்தி முற்றிலும் வதந்தி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறை எக்காரணத்தைக் கொண்டும் தனியார்மயமாக்கப்படாது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் தற்போது 7,200 புதிய அரசு பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் முதற்கட்டமாக ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டங்களாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தனியார் மயமாக்க எண்ணினால் குறைந்த காலத்தில் அனைத்து பேருந்துகளும் வாங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிரைவர், கண்டக்டர் பணிக்கு 685 பேர் எடுக்கப்பட்டனர். மற்றப் போக்குவரத்துப் பணிமனைக்கும் பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை நகர்ப் பகுதி, புறநகர்ப் பகுதி தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதால் அந்தந்த பகுதிகளுக்குத் தேவையான பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் மேலும், தற்போது மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவதாகவும் கூறினார்.

“அரசியல் காரணங்களுக்காக ஏதேனும் ஒரு புகார் தெரிவிக்க வேண்டும் என்பதால் அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

“ஒரு சில தொழிற்சங்கங்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதால் தனியார் மயமாக்கப்படுகின்றது என தொடர்ந்து குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் டி.டி.வி. தினகரன், சீமான், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தொடர்ந்து பேசி வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்