கடலில் கலக்கும் மழை நீரைச் சேமிக்க என்ன திட்டம்: உயர் நீதிமன்றம் கேள்வி

2 mins read
f7f6176d-39e5-4e89-b2d2-a9b54b069526
மழை நீரை வீணாக்காமல் சேமிக்க தமிழ்நாடு அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்று விளக்கம் கேட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: மழைக் காலங்களில் கடலில் கலக்கும் தண்ணீரைச் சேமிக்க தமிழ்நாடு அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்பதற்கு விரிவான விளக்கம் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆறுகள், ஏரிகள், அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளைச் சீரமைத்து அவற்றை ஆழப்படுத்தவும், தண்ணீர் விரயமாவதைத் தடுக்கவும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் பி. ஜெகன்நாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி கே.குமரேஷ் பாபு ஆகியோர் அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், “சென்னை மட்டுமன்றி தமிழ்நாடு முழுவதும் பருவமழைக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை அருகில் உள்ள ஏரிகளுக்கு ஏன் திருப்பிவிட்டு பாதுகாக்கக்கூடாது?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதில் அளித்த தமிழக அரசு தரப்பில் முன்னிலையான எட்வின் பிரபாகர், “நீர்வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே தனியாகத் துறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. குடிநீர், விவசாயம் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீரைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படும்,” என்றார்.

ஏரி, குளங்களுக்கு மழை நீரைத் திருப்பிவிடுவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், தமிழகத்தில் நீர்வளத்துறை உருவாக்கப்பட்ட பின்னர் அந்தத் துறையால் மேற்கொள்ளப்பட்ட புதிய திட்டங்கள் குறித்தும் விவரமான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

ஏரிகள், குளம், குட்டைகள் மற்றும் அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளை தூர் வாரி ஆழப்படுத்தவும், நீர் வழிப்பாதை, கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பராமரிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்