சென்னை: சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
அதன்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் திரியும் மாடுகள் பிடிபட்டால் அவற்றின் உரிமையாளருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை 5,000ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதல்முறையாக ஒரு மாடு பிடிபட்டால் ரூ.10,000, இரண்டாவது முறையாகப் பிடிபட்டால் ரூ.15,000 அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்கள் இரண்டு தினங்களுக்குள் மாடுகளை அழைத்துச் செல்லாவிட்டால், மூன்றாம் நாளிலிருந்து மாடுகளின் பராமரிப்புச் செலவுக்காக ரூ. 1,000 கூடுதலாக வசூலிக்கப்படும் என்று அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் மாடுகளைத் திரியவிட்டால் மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கை ஏற்கெனவே விடுக்கப்பட்டிருந்த போதிலும், தலைநகரின் பல இடங்களிலும் மாடுகள் திரிவதைக் காணமுடிகிறது.
இதனால் சாலைகளில் நடந்து செல்வோரும் பள்ளிக் குழந்தைகளும் அச்சத்துடனேயே அந்தப் பகுதிகளைக் கடக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், சாலைகளின் குறுக்கே சர்வ சாதாரணமாக உலா வரும் மாடுகளால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இவ்வாண்டில் மட்டும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் சுற்றித் திரிந்த 1,100க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
சென்னையில் தொழில் வரியை 35% உயர்த்தவும் மாமன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழில்வரி உயர்வை அங்கீகரிக்க அடுத்தகட்டமாக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட உள்ளது.

