மயிலாடுதுறை: மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு எதிராக 2003ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்ட இடத்தை விட்டுவிட்டு அக்கட்சியினர் வேறு ஓர் இடத்தில் பேரணி நடத்தினர்.
அதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் காவலர்களுக்கு விசிகவினருக்கும் இடையிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டதாக மயிலாடுதுறை காவல் நிலையத்தின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பான வழக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஜூலை 31ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தொல் திருமாவளவன் அந்த விசாரணைக்கு முன்னிலையாகவில்லை.
மத்திய அரசின் சட்டங்களை மீட்டுக்கொள்ள வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக அவரது தரப்பு வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்யாமல் இருந்தது உள்ளிட்ட காரணங்களால் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அதையடுத்து அவரைக் கைதுசெய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அத்துடன் வழக்கை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
தொல் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகி உள்ளார்.

