சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக சிக்குன்குனியா காய்ச்சல் அதிகமாகப் பரவத் தொடங்கி உள்ளது.
கடந்த ஜூன் மாதம் வரை 1,451 பேருக்கு சிக்குன்குனியா அறிகுறி இருந்தது. அதில் 331 பேருக்கு சிக்குன் குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பாதிப்பு இருந்தாலும், பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் உள்ளதாகவும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சல் கண்காணிப்பு, கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
சிக்குன்குனியா காய்ச்சல் ஏடிஎஸ் கொசுவினால் பரவுகிறது. கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் வலி, மூட்டு வலி, வயிற்று வலி, தொடர்ச்சியான வாந்தி, உடல் சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும். சிலருக்கு உடலில் அரிப்பு, சிவப்பு புள்ளிகள் தோன்றும்.
இந்தக் காய்ச்சல் தீவிரமாகிவிட்டால் உடலின் உட்பகுதியில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். மூட்டு வலியும் அதிகமாகும். ரத்தத்தின் தட்டையணுக்கள் குறைந்து உயிருக்கு ஆபத்தாகி விடும்.