சென்னை: தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரிலான விருது கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் இலக்கியவாதியும் முதுபெரும் அரசியல் தலைவருமான குமரி அனந்தனுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவின்போது குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
‘தகைசால் தமிழர்’ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட குமரி அனந்தனுக்கு ரூ.10 லட்சம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
91 வயதாகும் குமரி அனந்தன், பாஜக தலைவர்களில் ஒருவரும் முன்னாள் தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
‘தகைசால் தமிழர்’ விருது அறிமுகம் ஆன 3 ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சங்கரைய்யா, ஆர். நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோருக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

